அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள ஆலையடிவேம்பு பிரதேசத்தில் விசேட பயிற்சி செயலமர்வு தொடர்பாக பாடசாலை மாணவி ஒருவருக்கு அறிவிப்பதற்காக, மாணவியின் வீட்டிற்கு சென்ற ஆசிரியர் மற்றும் அதிபரைத் தாக்கியத்தைக் கண்டித்து இன்று(26) திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட ஆசிரியர்கள் தம்பிலுவில் மத்திய கல்லூரி முன்பாக இருந்து ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுத்து திருக்கோவில் மணிக்கூட்டுக் கோபுரம் வரை சென்று கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பிரதேசத்திலுள்ள பாடசாலையில் கல்வி கற்றுவரும் க.பொ.த.சாதாரண தர மாணவர்களுக்கான விசேட பயிற்சி செயலமர்வுக்கு அறிப்பதற்காக, அதிபரின் உத்தரவுக்கமைய மாணவர்களின் வீட்டிற்கு சென்ற ஆசிரியர், மாணவி ஒருவரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
இந்த நிலையில் மாணவிக்கு அறிவித்துவிட்டு அங்கிருந்து வெளியேற முற்பட்டபோது வீட்டில் சத்தம் கேட்ட நிலையில், வீட்டில் இருந்து வெளியில் வந்தவர் ஆசிரியரை தாக்கியதுடன் மோட்டார் சைக்கிளை அடித்து உடைத்ததையடுத்து, அசிரியர் தனக்கு நேர்ந்த கதியை அதிபருக்கு தெரிவித்த பின் அதிபர் அங்கு சென்று ஆசிரியரை காப்பாற்ற முற்பட்டபோது அதிபர் மீதும் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியதுடன் அவரது மோட்டார் சைக்கிளையும் அடித்து உடைத்துள்ளார். இப்படியான காட்டு மிரண்டித்தனமான விடயங்கள் இனி இடம்பெற கூடாது என தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


