இலங்கையின் கடல் வளத்திற்கும், கடற்றொழில் துறையின் நிலைபேறானதன்மைக்கும் பாரிய அச்சுறுத்தலாக விளங்கும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக, விரிவானதும் ஒன்றிணைந்ததுமான செயற்றிட்டமொன்றை முன்னெடுக்க கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
வெள்ளிக்கிழமை (22) கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இந்த விசேட கலந்துரையாடலில், கரையோர மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் கிஹான் மற்றும் ரொஷான் அக்மீமன ஆகியோரும், இலங்கை கடற்படை, கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம், கடற்றொழில் திணைக்களம், நாரா நிறுவனம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட நிறுவனங்களின் உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். பாதுகாப்பு அமைச்சின் செயலாளரைப் பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை இராணுவ அதிகாரி ஒருவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.
இங்கு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்,
சட்டவிரோத உபகரணங்களைப் பயன்படுத்தி எமது கடல் எல்லையையும், மீனவ மக்களையும், ஒட்டுமொத்த கடல் வளத்தையும் அழிக்கும் செயற்பாட்டிற்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
‘லைட் கோர்ஸ்’, ‘லைலா சுருக்கு’ வலைகள் மற்றும் வெடிபொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு மிக அதிகம். இந்த நிலை தொடர்ந்தால், எமது எதிர்கால சந்ததியினருக்கு ஒரு கடல் பாலைவனத்தையே நாம் விட்டுச் செல்ல நேரிடும்.
கடற்றொழிலையும் மீனவ மக்களின் எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்காகவே இந்த உறுதியான தீர்மானங்களை எடுத்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

