மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரும் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான நா.வேதநாயகன் அவர்கள், பிரதி அமைச்சரும், ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க ஆகியோரின் தலைமையில், மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மன்னார் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை (26.08.2025) இடம்பெற்றது.

 

மன்னார் நிருபர் அ.ராயூகரன்

 

மாவட்டச் செயலரின் வரவேற்புரையை தொடர்ந்து, பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தனது ஆரம்ப உரையில், அதிகாரிகளுக்கு போதுமான காலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் நேர்மையாகச் செயற்பட தவறினால் விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும் எனக் குறிப்பிட்டார். நாட்டின் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராகவும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதிகாரிகளுக்கு எதிராகவும் அது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

 

மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் அனுமதிக்கான திட்டங்கள் அதனைத் தொடர்ந்து சமர்ப்பிக்கப்பட்டன. இதன் பின்னர் கடந்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்களின் முன்னேற்றங்கள் ஆராயப்பட்டன.

 

இதன்போது வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களத்தின் பிரச்சினைகள் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல்கள் நடைபெற்றன. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு மாவட்ட ரீதியாக குழுக்கள் அமைக்கப்பட்டு மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் இதன்போது குறிப்பிட்டார்.

 

ஆசிரிய இடமாற்றம், ஆயுள்வேத வைத்தியர்கள் வெற்றிடம் நிரப்பப்படாமை தொடர்பிலும் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. அதேநேரம், மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையை மத்திய அரசிடம் கையளிப்பது தொடர்பான விவகாரம் ஆராயப்பட்டு பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பான விவகாரத்தை ஆளுநரிடம் பொறுப்பளிப்பது என பிரதி அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க குறிப்பிட்டார்.

 

ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், க.செல்வம்அடைக்கலநாதன், ரிசாட் பதியுதீன், ம.ஜெகதீஸ்வரன், க.திலகநாதன், கே.காதர் மஸ்தான், து.ரவிகரன், ஐ.முத்து மொஹமட் ஆகியோரும், கௌரவ தவிசாளர்கள், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், மாவட்டச் செயலக நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *