புலமைப் பரிசில் பரீட்சை; முதனிலை மாணவனுக்கு பிரதேச செயலாளர் நேரில் சென்று பாராட்டு

அண்மையில் வெளியான புலமைப்பரிசில் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் முதனிலை மாணவனாக சம்மாந்துறை வலயத்தின் அதிகஷ்ர பிரதேச பாடசாலையான மல்வத்தை-02 புதுநகர் அ.த.க. பாடசாலை மாணவன் பிரகலதன் கனீஸ் அதி கூடிய 180 புள்ளிகளைப் பெற்று மகத்தான சாதனை படைத்துள்ளார்.

இதுவே அம்பாறை மாவட்டத்தின் தமிழ் மொழி மூலமான அதிகூடிய புள்ளி சாதனை என்று குறிப்பிடுகிறது.

இம் மாணவனை சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மது ஹனீபா இன்று(09) நேரடியாக அந்த மாணவனின் வீடு சென்று பாராட்டி கெளரவித்தார்.

இந் நிகழ்வில் சம்மாந்துறை உதவிப் பிரதேச செயலாளர் வீ.வாசீத் அஹமட், சமூக சேவை உத்தியோகத்தர் அ.அஹமட் சபீர், பாடசாலை அதிபர் ரி.ஜெயசிங்கம், கிராம சேவகர்களான ஏ.பிரத்தீபன் மற்றும் ஐ.செல்வராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதுநகர் பாடசாலையில் இந்த முறை 8 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று 100 வீத மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *