ஆசிரியர் தலையங்கம் : 05
வணக்கம் என் உறவுகளே!
ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தொடரில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், தமிழ் மக்களின் நீதிக்குரிய போராட்டத்தை உலக அரங்கில் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். “இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு எதிராக குரல் கொடுக்கும் தமிழ் சிவில் சமூகத்திற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்” என்ற அவரது வேண்டுகோள், சர்வதேச சமூகத்திடம் நேரடியாகப் பொறுப்பை முன்வைத்திருக்கின்றது.
2008 டிசம்பர் முதல் 2009 மே மாதம் வரையிலான ஐந்து மாதங்களில் ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்ற குற்றச்சாட்டை அவர் முன்வைத்துள்ளார். இந்தப் பின்னணியில், ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலின் நிகழ்ச்சி நிரல் நான்கின் கீழ் இலங்கைக்கான சிறப்பு அறிக்கையாளரை நியமிக்க வேண்டும் என்றும், முன்னாள் OHCHR மனித உரிமைகள் உயர் ஆணையர்கள் பரிந்துரைத்தபடி இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பரிந்துரைக்க வேண்டும் என்றும் சிறீதரன் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்; உறவினர்கள் ஏற்பாடு செய்து வருகின்ற உண்ணாவிரதப் போராட்டம், இந்த வலியின் இன்னொரு வெளிப்பாடு ஆகும். தமிழ் தாய்மார்கள், இலங்கை குறித்த அறிக்கைகளையும் தீர்மானங்களையும் எரித்து தங்கள் ஏமாற்றத்தையும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்தினர். இது, வெளிநாட்டு அமைப்புகளின் மீதான நம்பிக்கையை முற்றிலும் சிதைந்துவிட்டது என்பதற்கான சாட்சியமாகும்.
இன்று தமிழ் மக்கள் கேட்பது, பாரபட்சமற்ற, சுயாதீனமான, சர்வதேச நீதியை. உள்ளக விசாரணைகள் தோல்வியுற்றுள்ளன. இலங்கை அரசின் அரசியல் மனப்பாங்கு இன்னும் மாறவில்லை. அதனால், உலக நாடுகள் தங்கள் குரலை உயர்த்தும் தருணம் இது என்று தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
சிறீதரனின் வேண்டுகோள், வெறும் அரசியல் அறிக்கை அல்ல. அது, ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளின் வலியையும், காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் துயரத்தையும், தலைமுறைகளாகத் தொடர்ந்து வரும் நீதியின்மையின் சாபத்தையும் பிரதிபலிக்கிறது. சர்வதேச சமூகம் இன்னும் தாமதித்தால் அது “அறியாமை” அல்ல, “செயற்கை மௌனம்” என்று வரலாறு பதிவு செய்யும் என்பதை எச்சரிக்கிறது. இனப்படுகொலைக்கு நீதி வழங்கத் தவறிய உலக சக்திகள், எதிர்கால தலைமுறைகளின் முன் பொறுப்பு ஏற்க வேண்டியிருக்கும்.
இன்று உலக நாடுகளிடம் கேட்கப்படும் கேள்வி மிகத் தெளிவானது: தமிழர் இனப்படுகொலைக்கு நீதி வழங்குவதில் நீங்கள் துணை நிற்பீர்களா? அல்லது, உங்கள் மௌனத்தால் வரலாற்றின் குற்றவாளிகளின் பக்கத்தில் நிற்பீர்களா?
சர்வதேச சமூகம் இனியும் மௌனம் காக்குமானால், அது இனப்படுகொலைக்கு துணை நிற்கும் செயலாகவே வரலாற்றில் எழுதப்படும். அதுவே உண்மை.
என்றும் அன்புடன்,
ஆசிரியர்
அ. அருள் சஞ்ஜீத்

