வடக்கின் அபிவிருத்தி சார்ந்து எம்மால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளைத் தற்போதைய அரசாங்கம் மிகவும் சாதகமாகவே பரிசீலித்து வருகிறது. எனவே, இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்தி, விளையாட்டுத் துறைக்குத் தேவையான வளங்களைப் பெற்று, எமது வீரர்கள் சர்வதேச அரங்கில் மிளிர வேண்டும், என வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவித்தார்.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள யாழ்ப்பாண மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நடும் விழா இன்று(23) யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்தில் நடைபெற்றது.
இதில் பங்கேற்று உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகே, நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், யாழ் மாவட்ட செயலர் பிரதீபன், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரின் இணைப்பாளர் கபிலன், விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள், வீரர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

