2026ஆம் ஆண்டிற்கான முதலாம் தர மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் நேற்று(29) ஆரம்பமானதைத் தொடர்ந்து, மட்/மம/டொக்டர் அஹமட் பரீட் வித்தியாலயத்தில் முதலாம் தர மாணவர்களை “மகிழ்ச்சியுடன் புன்னகை மற்றும் அன்புடன் பாடசாலைக்கு” எனும் தொனிப்பொருளில் வரவேற்கும் நிகழ்வு காலை 8.30 மணிக்கு பாடசாலையின் அதிபர் எம்.எம். ஜெஸான் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஏறாவூர் நகரசபையின் தவிசாளருமான நழீமும், கௌரவ அதிதிகளாக ஓய்வு பெற்ற அதிபர் நஜீப், காத்தான்குடி வைத்தியசாலையின் வைத்தியர் பஜ்ரியாவும், விசேட அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஈபிஎஸ்ஐ இணைப்பாளர் சித்தீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
தரம் 1க்கு இணைத்துக் கொள்ளப்பட்ட மாணவர்களை தரம் 2 இல் கல்வி கற்கும் மாணவர்கள் மாலை அணிவித்து உற்சாகமூட்டி வரவேற்றதுடன், தேசியக் கொடியேற்றப்பட்டு தேசிய கீதத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தரம் 1 மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில், ஏறாவூர் நகரசபையின் தவிசாளர் அல்ஹாஜ் நழீம் தனது சொந்த நிதியில் இருந்து 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஸ்மார்ட் போர்ட்டை பாடசாலைக்கு அன்பளிப்பாக வழங்கி வைத்தார்.
அத்துடன் மாணவர்களின் கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதோடு, மாணவர்களின் கல்விப் பயணத்திற்கு நல்ல தொடக்கமாக அமைய வேண்டும் என்பதற்கான அடையாளமாக அதிதிகள் மூலமாக மாணவர்கள் முதலெழுத்துகளை வரைந்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

