யாழ். மாவட்டச் செயலராக நான் பணியாற்றிய காலத்தில் இந்தப் பகுதியில் சுற்றுலாத்துறைக்கான அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. துரதிஷ்டவசமாக அப்போதிருந்த பிரதேச சபை நிர்வாகம் எமக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவில்லை என வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
மண்டைதீவில் அமைக்கப்பட்டுள்ள ‘நெய்தல் சூழல்நேய பூங்கா’ நேற்று(09) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகனால் திறந்து வைக்கப்பட்டது. இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பல முதலீட்டாளர்கள் முதலிடுவதற்காக வருகின்றபோதும் எமது திணைக்களங்களால் அவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கப்பெறவில்லை. தமது சபைகளுக்கு வருமானத்தை ஈட்டித் தரக் கூடிய முதலீட்டாளர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்கு தயக்கம் காண்பிக்கின்றனர். இழுத்தடிப்புச் செய்கின்றனர். ஏற்கனவே இங்கு முதலீடுகளைச் செய்த பலரும், எமது நிர்வாகங்களின் அசமந்தமான செயற்பாடு காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிலைமை தொடருமானால் இங்கு முதலீட்டாளர்கள் வருவதற்கு தயக்கமான நிலைமையே ஏற்படும். அது எமது மாகாணத்தை பல வகையிலும் பாதிக்கும். இளையோருக்கு வேலைவாய்ப்பு தேவை என்று நாம் கோரும் அதேவேளை அதற்கு முதலீடுதான் வழியாக இருக்கும் நிலையில் அதனையும் இழப்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.


