மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

சிறுபோக நெற்செய்கைக்காக அரச காணிகளைப் பங்கீடு செய்யும் போது, வறுமை நிலையில் உள்ள விவசாயிகளும் பயன்பெறும் வகையிலேயே அப்பங்கீடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.

 

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (12)  காலை மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மன்னார் மாவட்டச் செயலாளர் கே.கனகேஸ்வரன் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இக்கூட்டத்துக்கு, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், கூட்டுறவுத்துறை கௌரவ பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க அவர்கள் தலைமை தாங்கினார்.

 

கடந்த 29.04.2026 அன்று இடம்பெற்ற ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் ஆராயப்படாது விடுபட்ட விடயங்களே இன்றைய தினம் பிரதானமாக எடுத்துக் கொள்ளப்பட்டன.

 

கூட்டத்தில் முதற்கட்டமாக மாவட்ட மட்டப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டது. இதன்போது சிறுபோக நெற்பயிர்ச்செய்கைக்காகக் காணிகளைப் பகிர்ந்தளிப்பதில் நிலவும் சர்ச்சைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. ஏல முறையின் மூலம் காணிகளை வழங்கியது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்ட போதிலும், இவ்விடயம் தொடர்பில் இறுதி முடிவெடுப்பதற்காகத் தனியானதொரு விசேட கூட்டத்தை நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது. இதன்போதே வறுமை நிலையிலுள்ள விவசாயிகளின் நலனை உறுதிப்படுத்தும் வகையில் காணி பங்கீடுகள் அமைய வேண்டும் என ஆளுநர் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

 

மன்னார் மணல் திட்டுக்களை மையப்படுத்திய சுற்றுலா கப்பல் போக்குவரத்துச் சேவையை ஆரம்பிப்பது தொடர்பான விடயத்தில், மன்னார் பிரதேச சபை தனது அனுமதியைத் துரிதமாக வழங்க வேண்டும் என இக்கூட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மேலும், மாவட்டத்தில் பொதுமக்கள் எதிர்நோக்கும் பல்வேறு போக்குவரத்துப் பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு உரிய தீர்வுகள் முன்மொழியப்பட்டன.

 

இறுதியாக, பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் ஆராயப்பட்டு, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முடிவுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுத் தீர்மானங்கள் எட்டப்பட்டன.

 

இன்றைய கூட்டத்தில் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான், வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்), உள்ளூராட்சி மன்றங்களின் கௌரவ தவிசாளர்கள், மாகாண மற்றும் மத்திய அரச திணைக்களங்களின் தலைவர்கள், பாதுகாப்புப் படையினர், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *