நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்; வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

நுவரெலியா பிரதான நகர், ஹாவா-எலிய, கந்தப்பளை, நானுஓயா, ரதல்ல மற்றும் தலவாக்கலை போன்ற பகுதிகளில் இன்று (13) அதிகாலை முதல் நிலவும் இந்த மாறுபட்ட காலநிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், கடும் குளிரும் நிலவி வருகிறது.

 

அடர்ந்த பனிமூட்டம் காரணமாக வீதிகளில் எதிரே வரும் வாகனங்களை அவதானிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டு, வாகனங்களின் வேகத்தைக் குறைத்துச் செலுத்த வேண்டும் எனவும் ,முகப்பு விளக்குகளை (Fog lights) ஒளிரவிட்டுப் பயணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

மேலும் முன் செல்லும் வாகனங்களுக்கும் தமக்கும் இடையில் போதிய இடைவெளியைப் பேணுதல் அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதிக வாகனப் போக்குவரத்து நிலவும் நுவரெலியா – பதுளை, நுவரெலியா – ஹட்டன் மற்றும் நுவரெலியா – கண்டி ஆகிய பிரதான வீதிகளில் பயணங்கள் மேற்கொள்ளும் போது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

மேலும், ஏற்கனவே மழையினால் பாதிக்கப்பட்டு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் பகுதிகளில், தற்போதைய மழையால் பணிகள் தாமதமடைந்துள்ளன. எனவே, நிலச்சரிவு அபாயம் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *