தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பம்பரகல பகுதியில் அமைந்துள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்ற இளைஞர்கள் குழுவொன்று கடந்த 2026 மே 17 ஆம் திகதி நண்பகல் நீரில் மூழ்கியுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தெல்தெனிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வெரல்லகம பகுதியைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்றிருந்த நிலையில், அவர்கள் நால்வரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதில் ஒருவரை பிரதேச மக்கள் மீட்டு தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, இலங்கை பொலிஸ் உயிர்காக்கும் பிரிவு, மாபெரியதென்ன விமானப்படை முகாம் அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம் நீரில் மூழ்கி உயிரிழந்த மூன்று இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன.
உயிரிழந்தவர்கள் 18, 20 மற்றும் 21 வயதுகளைக் கொண்ட வெரல்லகம பகுதியைச் சேர்ந்தவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சடலங்கள் தெல்தெனிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

