செல்வாநகர் வித்தியாலயத்தின் புதிய கட்டடத் திறப்பு விழா

வடக்கு மாகாணத்திலுள்ள எந்தவொரு மாணவனுக்கும் வறுமை ஒருபோதும் கல்விக்குத் தடையாக அமையக் கூடாது. வறுமையால் கல்வியைக் கைவிடும் நிலைமை எந்தவொரு பிள்ளைக்கும் ஏற்படக்கூடாது. அதனை உறுதிசெய்வது அதிகாரிகளாகிய எமது தலையாய கடமையாகும். இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவித்தார்.

 

கிளிநொச்சி, செல்வாநகர் வித்தியாலயத்தின் புதிய கட்டடத் திறப்பு விழா இன்று (22) பிற்பகல் 2.30 மணிக்கு பாடசாலை அதிபர் சி.மகேந்திரராஜா அவர்களின் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது. மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியிலிருந்து 23 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் இந்த இரண்டு மாடிக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. இதுவே இப்பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள முதலாவது மாடிக் கட்டடமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

விழாவில் கலந்துகொண்ட விருந்தினர்கள் பாடசாலை மாணவர்களின் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் கௌரவமாக அழைத்து வரப்பட்டனர். மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து, தேசியக் கொடி மற்றும் பாடசாலைக் கொடி என்பன ஏற்றிவைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட கௌரவ ஆளுநரால் புதிய கட்டடம் மாணவர்களின் பயன்பாட்டுக்காகத் திறந்து வைக்கப்பட்டதுடன், வளாகத்தில் மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றது.

 

நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர் மேலும் தெரிவிக்கையில்,

 

ஒரு நிறுவனத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் அதன் தலைவரிலேயே தங்கியுள்ளது. அதிலும் பாடசாலைகளைப் பொறுத்தவரையில் அதிபர்களின் தலைமைத்துவம் மிகவும் முக்கியமானது. இப்பாடசாலையின் அதிபரின் சிறந்த தலைமைத்துவத்தினாலேயே பாடசாலை இன்று வளர்ச்சியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது. சமூகத்தின் மீது அக்கறை கொண்டு அர்ப்பணிப்புடன் அவர் செயலாற்றுகின்றார். சமூகத்தையும் ஆசிரியர்களையும் அரவணைத்துச் சிறப்பாக வழிநடத்துகின்றார். இங்குள்ள ஆசிரியர்களும் மாணவர்கள் மீது அதீத அக்கறை எடுத்துச் செயற்படுவது மிகவும் பாராட்டுக்குரியது. இவ்வாறு அனைவரும் ஒன்றிணைந்து ஓர் அணியாகச் செயற்படுவதை நான் மனதாரப் பாராட்டுகின்றேன்.

 

அதிபர், ஆசிரியர்களின் இந்த அரும்பணிக்கு இக்கிராமத்து இளைஞர்களும் முழுமையான ஆதரவை வழங்குகின்றார்கள் என்பதை அறியும்போது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கின்றது. பல இடங்களில் இளையோர் தவறான வழிகளில் செல்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் தற்போதைய சூழலில், இங்குள்ள இளைஞர்கள் பாடசாலை மீதும், மாணவர்களின் கல்வி மீதும் அக்கறையுடன் செயற்பட்டு அவர்களைக் கண்காணித்து வருவது மிகவும் வரவேற்கத்தக்கது. வன்னியில் வேறு சில இடங்களிலும் இளைஞர்கள் தமது கிராமங்களில் சட்டவிரோதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான சமூக அக்கறையுள்ள இளைஞர்களை நான் வெகுவாகப் பாராட்டுகின்றேன்.

 

பாடசாலையில் பயிலும் மாணவர்களில் பலர் தாய், தந்தை அல்லது இருவரையும் இழந்தவர்கள் என அதிபர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். அவ்வாறான பிள்ளைகளை நாம் நிச்சயமாக அரவணைத்துச் செல்ல வேண்டும். அவர்கள் கல்வியில் உயர்வடையும்போதே, அவர்களின் குடும்பமும் அதனைத் தொடர்ந்து இந்தச் சமூகமும் வளர்ச்சியடையும். பெற்றோரின் கண்காணிப்பு குறைவால் பாடசாலைக்குச் செல்லாமல் வீட்டிலிருக்கும் பிள்ளைகளைக் கண்டறிந்து, அவர்களை மீண்டும் பாடசாலைக்கு அழைத்து வரும் அதிபர் மற்றும் ஆசிரியர்களின் பணி உண்மையில் அளப்பரியது. நீங்கள் இந்தச் சமூகத்துக்கு ஆற்றும் பணி மகத்தானது.

 

தற்போதைய அரசாங்கம் கிராமப்புறங்களின் அபிவிருத்தியிலும், உட்கட்டமைப்பு வசதிகளின் மேம்பாட்டிலுமே கூடுதல் அக்கறை செலுத்துகின்றது. கல்வியால் சமூகம் உயர்வடையும்போது, கிராமமும் தானாகவே வளர்ச்சியடையும்.

 

என்னை பொறுத்தவரையில், வன்னிப் பிரதேசத்தில் பல பாடசாலைகள் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களிலேயே அமைந்துள்ளன. அங்குள்ள மாணவர்களின் கல்விக்கு இருக்கும் ஒரேயொரு வாய்ப்பு அந்தப் பாடசாலைகள் மாத்திரமே. அந்த மாணவர்களுக்கு அங்கு கல்வி கிடைக்காவிட்டால், அவர்களின் எதிர்காலமே இருண்டுவிடும். எனவேதான், அத்தகைய பாடசாலைகளிலுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நாம் முன்னுரிமை அளித்துச் செயற்படுகின்றோம். ஆசிரியர் இடமாற்றங்களின்போது இவ்விடயத்தில் நாம் கூடுதல் அக்கறை செலுத்துவதாலேயே பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும், வன்னி மாணவர்களின் கல்வியை உறுதி செய்வதில் நாம் உறுதியாக நிற்போம்’ என்றார்.

 

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன் மற்றும் கிளிநொச்சி தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி பிரதீபா காயத்திரி கஜபதி ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், கௌரவ விருந்தினர்களாக செல்வாநகர் முத்துமாரி அம்மன் தேவஸ்தானத்தின் சிவஸ்ரீ விபுலானந்த குருக்கள், உருத்திரபுரம் பங்குத்தந்தை அருட்தந்தை வண. ஜோன்கனிசியஸ் அடிகளார், கரைச்சிக் கோட்டக்கல்விப் பணிப்பாளர் சு.தர்மரத்தினம் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இவர்களுடன் பாடசாலைச் சமூகத்தினர், மாணவர்கள் மற்றும் ஊர் மக்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *