அனுமதிப்பத்திரமின்றி 22 கால்நடைகளை கொண்டு செல்ல முயன்றவர் கைது – கிளிநொச்சியில் சம்பவம்
கிளிநொச்சி, அக்கரையான் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முக்கம்பன் பகுதியில் இருந்து, அனுமதிப்பத்திரமின்றி 22 கால்நடைகளை பார ஊர்தி மூலம் கொண்டு செல்ல முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று(23) இரவு, கிளிநொச்சி மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், முகமாலை பகுதியில் நடத்தப்பட்ட வீதி சோதனையின் போது குறித்த பார ஊர்தி மடக்கிப் பிடிக்கப்பட்டது.
சோதனையின் போது, 22 கால்நடைகள் உரிய சுகாதார வைத்திய அதிகாரி அனுமதிப்பத்திரம், கால்நடை வைத்தியர் அனுமதி, மற்றும் போக்குவரத்து வழித்தட அனுமதி இன்றி கொண்டு செல்லப்பட்டதும், தேவையான சுகாதார வசதிகள் பின்பற்றப்படாததும் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, 43 வயதுடைய சாரதி கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் 26ஆம் திகதி அன்று கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

