இராகலையில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் பெண் படுகாயம்

இராகலை (நுவரெலியா) – மஹகுடுகலை, அப்பிள் பாம் பிரதேசத்தில், இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று(28) இடம்பெற்றுள்ளது.

 

காயமடைந்தவர், ஹைபொரஸ்ட் இல.01-ஐச் (மஹாவலிகுவாட்டஸ்) சேர்ந்த மகாலிங்கம் சித்திராதேவி எனத் தெரியவந்துள்ளது.

 

காயமடைந்தவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்குச் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். எனினும் மீண்டும் அவர் நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 

தனது தங்கை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சகோதரர் மகாலிங்கம் சிவகுமார் தெரிவித்தார்.

 

அப்பிள் பாம் பிரதேசத்தில் அமைந்துள்ள மரக்கறித் தோட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த குறித்த பெண், அங்கு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக குடிசை போன்ற ஒன்றிற்குள் நுழைந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 

மிருகங்களை வேட்டையாட பயன்படுத்தப்படும் ஹக்கபடஸ் வெடித்ததில் பெண் காயமடைந்திருக்கலாம் என இராகலை பொலிஸார் சந்தேகிப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

 

இது தொடர்பில் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாகவும், இராசாயண பகுப்பாய்வினை மேற்கொள்ளவுள்ளதாகவும் இராகலை பொலிஸ் அறிக்கையிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *