அடுத்த 10 நாட்களில் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

நாடு முழுவதும் இன்னும் 10 நாட்களில் பரவலான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.

இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என தெரிவித்துள்ளார்.

இதனால் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதால், அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், டிசம்பர் மாதத்தில் நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொதுவாக சாதாரண மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சில சந்தர்ப்பங்களில் IOD நிலைமையின் தாக்கத்தால் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.

அதேவேளை, அடுத்த வருடம் பெப்ரவரி முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதியில் வெப்பநிலை அதிகரித்து, மழைவீழ்ச்சி குறைவடையும் வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.

இதனால் எதிர்வரும் சில மாதங்களில் கிடைக்கும் மழைநீரை முறையாக முகாமைத்துவம் செய்வது அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *