மன்னார் கடற்பகுதியில் சிக்கிய இரு மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு!

மன்னார் வடக்கு கடற்பகுதியில் விபத்தில் சிக்கி, எரிபொருள் இன்றி மிதந்து கொண்டிருந்த ஒரு நாள் மீன்பிடிப் படகில் இருந்த இரு மீனவர்களை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் குருநகர் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 19ஆம் திகதி இரு மீனவர்களுடன் புறப்பட்ட IDAY – A – 0126 JFN என்ற இலக்கமுடைய மீன்பிடிப் படகு மீண்டும் துறைமுகத்திற்குத் திரும்பாதமை தொடர்பில் மீன்பிடி மற்றும் நீர்வாழ் வளங்கள் திணைக்களம், கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அறிவித்திருந்தது.

இதையடுத்து, வடக்கு மற்றும் வடமத்திய கடற்படை தளபத்தியங்களுக்கு தகவல் வழங்கப்பட்டு, விசேட தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது தலைமன்னாருக்கு வடக்கே கடற்பகுதியில் எரிபொருள் இன்றி செயலிழந்து மிதந்து கொண்டிருந்த மீன்பிடிப் படகு கண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்த இரு மீனவர்களும் இன்று (21) அதிகாலை பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

பின்னர், மீனவர்களும் படகும் தலைமன்னாருக்கு அழைத்துவரப்பட்டதுடன், மீனவர்களுக்கு தேவையான மனிதநேய உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

இலங்கையின் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு வலயத்திற்குள் ஆபத்தில் சிக்கக்கூடிய கடற்படை மற்றும் மீனவ சமூகத்தினருக்கு உதவுவதற்காக கடற்படையினர் தொடர்ந்து தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *