அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பௌர்ணமி தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட வீடு ஒன்றை நேற்று(14) பொலிஸார் முற்றுகையிட்டனர்.
இதன்போது சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் உட்பட 4 பேரை கைது செய்ததுடன் கால் போத்தல்கள் கொண்ட 75 மதுபானங்களுடனான போத்தல்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய சம்பவதினமான நேற்று இரவு குறித்த பிரதேசத்திலுள்ள பஸ்தியான் வீதியிலுள்ள வீடு ஒன்றை அக்கரைப்பற்று பொலிஸார் சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.
இதன் போது அங்கு சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்ததுடன் அவரிடமிருந்து 75 கால் போத்தல்கள் கொண்ட மதுபானங்களுடன் போத்தல்களை மீட்டனர்.
அதேவேளை குறித்த வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரைக் கண்டு தப்பி ஓடிய நிலையில் அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட அம்பாறையைச் சேர்ந்த 3 பேரை கைது செய்தனர்.
இதேவேளை குறித்த வீட்டில் நீண்ட காலமாக சட்டவிரோதமாக சூதாட்டம் மற்றும் மதுபான விற்பனை போன்ற பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் வீட்டின் உரிமையாளர் பொலிஸாரின் உளவாளி என தெரிவித்து பிரதேசத்தில் மக்களை அச்சுறுத்தி பல்வேறு அடாவடிகள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவருக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுக்காது வருகின்றதாகவும் பொதுமக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

