வெண்கலப் பதக்கப் போட்டியில் இலங்கை அணி 165 ஓட்டங்கள் குவிப்பு

ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஆடவர் கிரிக்கெட் போட்டியின் 3 ஆவது இடத்திற்கான (வெண்கலப் பதக்கம்) ஆட்டத்தில், பங்களாதேஷ் அணிக்கு எதிராக முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களை குவித்துள்ளது.

ஜப்பானின் நிஷின் நகரில் இன்று (3) நடைபெறும் இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

ஆரம்பத்தில் இலங்கை அணி கடும் சரிவைச் சந்தித்தது. வெறும் 21 ஓட்டங்களுக்குள் முதல் 4 விக்கெட்டுகளை இழந்து தவித்த போதிலும், பின்னர் வந்த வீரர்கள் அணியை மீட்டெடுத்தனர்.

இலங்கை அணி சார்பில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய தரிந்து ரத்நாயக்க 32 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் அடங்கலாக 65 ஓட்டங்களை விளாசினார். தலைவராகச் செயற்பட்ட சஹான் ஆரச்சிகே 33 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் மெஹிதி ஹசன், முஸ்தபிசுர் ரஹ்மான் மற்றும் சைஃப் ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் வீழ்த்தினர்.

இதன்படி, வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்ற பங்காளதேஷ் அணிக்கு 166 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *