சிலோன் வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு உச்சி மாநாடு 2026, ஒக்டோபர் 12 மற்றும் 13ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியத் தொழில் கூட்டமைப்பு (CII) மற்றும் கொச்சி வர்த்தக மற்றும் தொழில் சம்மேளனம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு வணிகக் குழுக்களைச் சேர்ந்த 10 உறுப்பினர்கள் இலங்கைக்கு வருகை தந்தனர்.
சுகாதாரம், மருந்துகள், சூரிய ஆற்றல், தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி மற்றும் காலணி தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த இந்தியப் பிரதிநிதிகள், இலங்கையின் முக்கிய பங்குதாரர்களுடன் சந்திப்புகளை நடத்தி, வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடினர்.
இதன்போது எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க, தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, இலங்கை முதலீட்டுச் சபை மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் நோக்கில், இலங்கை நிறுவனங்களுடன் வணிகங்களுக்கு இடையிலான (B2B) சந்திப்புகளும் இடம்பெற்றன. இந்தியக் குழுவினர் நெஸ்லே மற்றும் எலிஃபண்ட் ஹவுஸ் நிறுவனங்களின் உற்பத்தி நிலையங்களுக்கும் விஜயம் செய்து பார்வையிட்டனர்.
இதேவேளை, கொச்சி வர்த்தக மற்றும் தொழில் சம்மேளனமும் சிலோன் வர்த்தக சம்மேளனமும் கேரளா – இலங்கை வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டன.
இரு வணிகக் குழுக்களும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவைச் சந்தித்து, இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் இந்திய நிறுவனங்களுக்கான முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடின.
இந்த விஜயங்கள் மற்றும் ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா – இலங்கை இடையிலான பொருளாதார உறவுகள், வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் முதலீட்டுத் தொடர்புகள் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

