அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அறநெறிப் பாடசாலை மாணவர்களின் ஊர்வலமும் கலை நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றன.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர். திரவியராஜ் தலைமையில், கலாசார அலுவல்கள் திணைக்களமும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
ஆலையடிவேம்பு கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கரி கிருஷ்ணகுமாரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற ஊர்வலம், வம்மியடி பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமாகி, மத்திய வீதி வழியாக முருகன் ஆலய அறநெறிப் பாடசாலை மண்டபத்தைச் சென்றடைந்தது.
இதில் ஆலையடிவேம்பு கலைமகள் அறநெறிப் பாடசாலை மற்றும் அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா அறநெறிப் பாடசாலை மாணவர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்வுகளில் மாணவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தினர். நிகழ்வுகளில் பங்கேற்ற மாணவர்களுக்குப் பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டதுடன், அறநெறிக் கல்வியில் தேசிய மட்டத்தில் வெற்றிபெற்ற மாணவர்களும் பரிசுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் அரச உத்தியோகத்தர்கள், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
சமயப் பண்பாட்டைப் பாதுகாத்தல் மற்றும் இளைய தலைமுறையினரிடையே அறநெறிக் கல்வியின் முக்கியத்துவத்தை வளர்த்தல் ஆகிய நோக்கங்களுடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

