மட்டக்களப்பைச் சேர்ந்த அனுருத்தன் மற்றும் ஜெயஸ்ரீராம் ஆகிய சகோதரர்கள் சர்வதேச கராத்தேப் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்று இலங்கைக்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
கடந்த 17.10.2026 அன்று வென்னப்புவவில் அமைந்துள்ள சேர் அல்பர்ட் எப். பீரிஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற SHINICHI SHIGEYOSHI CUP 2026 – INTERNATIONAL OPEN KARATE CHAMPIONSHIP சர்வதேச திறந்த கராத்தேப் போட்டியில் பங்கேற்ற இரு சகோதரர்களும், கட்டா (Kata) மற்றும் குமித்தே (Kumite) ஆகிய பிரிவுகளில் தமது திறமைகளை வெளிப்படுத்தி இந்தச் சாதனையைப் படைத்துள்ளனர்.
இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள் உள்ளிட்ட பங்களாதேஷ், பாகிஸ்தான், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வீரர்கள் பங்கேற்ற இப்போட்டியில், அனுருத்தன் மற்றும் ஜெயஸ்ரீராம் ஆகியோர் பதக்கங்களை வென்றமை அவர்களது குடும்பத்தினரிடையே பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வெற்றிக்காக இரு வீரர்களுக்கும் தொடர்ச்சியான பயிற்சிகளையும் ஊக்கத்தையும் வழங்கி அர்ப்பணிப்புடன் வழிகாட்டிய ரங்கன் மாஸ்டர் மற்றும் கழகத்தினருக்கு அவர்களது குடும்பத்தினர் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.
மேலும், இப்போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வென்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ள அவர்கள், இளம் வீரர்களின் வெற்றிப் பயணம் தொடர்வதுடன், எதிர்காலத்திலும் நாட்டுக்கும் மாவட்டத்திற்கும் மேலும் பல பெருமைகளைச் சேர்க்க வேண்டும் எனவும் வாழ்த்தியுள்ளனர்.

