திருகோணமலையில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் விசேட சேவை முகாம்!

கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கொன்சியுலர் முகாம் இன்று (26) திருகோணமலை மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

 

காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற்ற இம்முகாமில், இந்திய விசா, கடவுச்சீட்டு மற்றும் ஏனைய தூதரக சேவைகளைப் பெற்றுக்கொள்ள விரும்பிய பொதுமக்களுக்கு ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன

சுற்றுலா, மருத்துவம், கல்வி மற்றும் ஆன்மீகப் பயணங்களுக்காக இந்தியா செல்ல விரும்பும் இலங்கைப் பிரஜைகளுக்கு விசா விண்ணப்பங்கள் தொடர்பான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டதுடன், இலங்கையில் வசிக்கும் இந்தியப் பிரஜைகளுக்கான புதிய கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் மற்றும் காலாவதியான கடவுச்சீட்டுகளைப் புதுப்பித்தல் தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

 

மேலும், வெளிநாட்டு இந்தியக் குடியுரிமை (OCI) அட்டைகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பான ஆலோசனைகள் மற்றும் கல்வி, பிறப்பு, திருமணம், வணிகம் உள்ளிட்ட ஆவணங்களைச் சான்றொப்பம் செய்வதற்கான வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.

 

இந்நிகழ்வில், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கொன்சியுலர் சஞ்சீவ் அரோரா, கொன்சியுலர் பிரிவின் இரண்டாவது செயலாளர் எம். காண்டீபன், திருகோணமலை மாவட்ட பாராபளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், திருகோணமலை மாநகர சபை முதல்வர் கந்தசாமி செல்வராஜா மற்றும் மாநகர சபை ஆணையாளர் உ. சிவராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

கொழும்புக்குச் செல்லாமல் தமது பிரதேசத்திலேயே இந்தியத் தூதரக அதிகாரிகளை நேரடியாகச் சந்தித்து தேவையான சேவைகளையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள இம்முகாம் வாய்ப்பளித்ததாகப் பொதுமக்கள் தெரிவித்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *