திருக்கோவிலில் கிணற்றிலிருந்து துப்பாக்கிப் பாகங்கள் மீட்பு!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடா பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து ரி56 ரகத் துப்பாக்கித் தோட்டாக்கூடுகள் மற்றும் இலகுரக இயந்திரத் துப்பாக்கியின் (LMG) பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.

 

பழைய விசேட அதிரடிப்படை உணவகத்திற்கு முன்பாக அமைந்துள்ள குறித்த கிணற்றிலிருந்து, இரகசியத் தகவலையடுத்து அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்ற திருக்கோவில் பொலிஸார் ஆயுதப் பாகங்களை மீட்டுள்ளனர்.

 

இதன்போது, ஒன்பது ரி56 ரகத் தோட்டாக்கூடுகள், போல்ட்கள் உள்ளிட்ட பாகங்களுடன் கூடிய மூன்று ரி56 துப்பாக்கிப் பாகங்கள் மற்றும் ஆறு இலகுரக இயந்திரத் துப்பாக்கியின் பாகங்கள் அல்லது தோட்டாக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

 

கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் அம்பாறை – மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல ஆகியோரின் வழிகாட்டலில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

அம்பாறை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சியின் நேரடி வழிகாட்டலிலும், அக்கரைப்பற்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நுவன் தந்தராயணவின் மேற்பார்வையிலும் இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

 

திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லலிந்த பீரிஸ் தலைமையிலான பொலிஸ் குழுவினர், மீட்கப்பட்ட ஆயுதப் பாகங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *