வண்ணாத்திவில்லு வெடிபொருள் வழக்கில் ‘கபூர் மாமா’வுக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை!

வண்ணாத்திவில்லு, லக்டோவத்த பகுதியில் வெடிபொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களைப் சேமித்து வைத்திருந்த சம்பவம் தொடர்பான வழக்கின் 3 ஆம் பிரதிவாதியான ‘கபூர் மாமா’ என அழைக்கப்படும் மொஹமட் ஷரீப் ஆதம் லெப்பை என்பவருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர நீதாய மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தன் மீதான 5 குற்றச்சாட்டுகளையும் பிரதிவாதி ஒப்புக்கொண்டதை அடுத்து, மேல்நீதிமன்ற நீதிபதிகளான லால் ரணசிங்க பண்டார, ரஷ்மி சிங்கப்புலி மற்றும் நயோமி விக்ரமசிங்க ஆகிய மூவரை கொண்ட நீதிபதிகள் குழாம் இன்று (28) இந்தத் தீர்ப்பை வழங்கியது.

ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டபோதிலும், அந்த தண்டனைகளை ஒரே காலத்தில் அனுபவிக்குமாறு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டனர்.

அதற்கமைய, அவரது மொத்த சிறைத்தண்டனைக்காலம் 12 ஆண்டுகளாக அமையும் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும், பிரதிவாதி இதுவரை விளக்கமறியலிலும் தடுப்புக் காவலிலும் கழித்த ஏழரை ஆண்டுகளை இந்தத் தண்டனைக் காலத்திலிருந்து கழிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி, அவர் மேலும் சுமார் நான்கரை ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும் என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

வழக்கு விசாரணைகளை நீடிக்காமல் குற்றத்தை ஒப்புக்கொண்டமை, அவரது வயது மற்றும் ஏனைய விசேட சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டே நீதிபதிகள் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

இதனிடையே, இந்த வழக்கின் 6 ஆம் பிரதிவாதியான ‘சஜித் மௌலவி’ என அழைக்கப்படும் மொஹமட் ரமீஸ் மொஹமட் சஜித், தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த தனது நிலைப்பாட்டை அறிவிக்க மேலதிக அவகாசம் கோரியுள்ளார்.

அவரது நிலைப்பாட்டை அறிவதற்காக வழக்கினை நாளை (29) காலை 8 மணிக்கு மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், அவரை காலை 7.45 க்கு நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்குக் கட்டளையிட்டது.

அத்துடன், ‘கபூர் மாமா’வுக்கு எதிராகக் கேகாலை மற்றும் மட்டக்களப்பு மேல்நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள இரு வழக்குகளுக்காக அவர் அழைத்துச் செல்லப்படும் போது விசேட பாதுகாப்பு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் சட்டமா அதிபரால் 6 பிரதிவாதிகளுக்கு எதிராக 13 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அவர்களில் 5 பிரதிவாதிகள் ஏற்கனவே குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டனை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *