இலங்கைத் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அரசியல் தீர்வு, காணிப் பிரச்சினைகள், ஆலய விவகாரங்கள், பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் மீனவர் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய அரசாங்கத்திடம் எடுத்துரைத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார்.
இந்திய நிதியமைச்சரைச் சந்தித்தபோது, தமிழ் மக்களின் பிரச்சினைகளை இந்தியப் பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாகவும், உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க இராஜதந்திர ரீதியில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் உறுதியளித்ததாக அவர் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பில் திங்கட்கிழமை (02) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், வடக்கு – கிழக்கின் அபிவிருத்தி, இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளின் எதிர்காலம் மற்றும் இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பிலும் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்தார்.

