நுவரெலியாவில் விஷ வாயு தாக்கி தம்பதியினர் பலி!

நுவரெலியா, மீபிலிமான பகுதியில் வாடகைக்கு பெறப்பட்ட வீடொன்றில் தங்கியிருந்த தம்பதியினர் விஷ வாயுவை சுவாசித்தமையினால் இன்று (03) அதிகாலை உயிரிழந்துள்ளனர்.

அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய மற்றும் 46 வயதுடைய இத்தம்பதியினர், மீபிலிமான பகுதியில் சுற்றுலா விடுதியொன்றின் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டு வந்ததுடன், அச்சுற்றுலா விடுதி நிர்மாணிக்கப்படும் வரை அதற்கு அருகிலேயே தற்காலிகமாக வாடகைக்கு பெறப்பட்ட வீடொன்றில் தங்கியிருந்துள்ளதாக நுவரெலியா பிராந்தியத்திற்கு பொறுப்பாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சந்தன பஸ்நாயக்க தெரிவித்தார்.

உயிரிழந்த ஆண், கப்பல் மாலுமியாக (Captain) கடமையாற்றியவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா பகுதியில் நிலவும் கடும் குளிரான வானிலை காரணமாக, பார்பிகியூ (BBQ) அடுப்பை பற்றவைத்து அதனை அறைக்குள் வைத்தவாறே இத்தம்பதியினர் உறங்கச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இன்று அதிகாலை உறவினர்கள் தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொள்ள முயன்றும், அவர்கள் அழைப்புகளுக்கு பதிலளிக்காததால், உறவினர்கள் அப்பகுதியின் கிராம உத்தியோகத்தருக்கு அது குறித்து அறிவித்துள்ளனர்.

கிராம உத்தியோகத்தர் வீட்டிற்குச் சென்று பரிசோதித்த போது தம்பதியினர் உயிரிழந்திருப்பது தெரியவந்ததுடன், அது தொடர்பில் நானுஓயா பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *