கல்குடா வலயத்தின் 4ஆவது ‘பட்டாம்பூச்சி’ சித்திரக் கண்காட்சி வம்மிவட்டவானில்!

கல்குடா கல்வி வலய சித்திரப் பாட ஆசிரியர்களின் ஏற்பாட்டில், நான்காவது ‘பட்டாம்பூச்சி’ சித்திரக் கண்காட்சி வம்மிவட்டவான் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

வலயக் கல்விப் பணிப்பாளர் த. அனந்தரூபனின் ஆலோசனைக்கு அமைவாக, மாணவர்களிடம் காணப்படும் உள்ளார்ந்த சித்திரத் திறமைகளை வெளிக்கொணர்வதுடன், சித்திரப் பாடம் தொடர்பான ஆர்வத்தையும் படைப்பாற்றலையும் ஊக்குவிக்கும் நோக்கில் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இக்கண்காட்சியைப் பார்வையிடுவதற்காக கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட பல்வேறு பாடசாலைகளின் மாணவர்கள் வருகை தந்து, மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான ஓவியங்கள் மற்றும் கலைப்படைப்புகளை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகள் மற்றும் சித்திரப் பாட ஆசிரியர்கள் நினைவுச் சின்னங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்வின் நன்றியுரையை சித்திரப் பாட ஆசிரிய ஆலோசகர் வா. சுஜுவ் நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் கல்வி நிர்வாகப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் கே. ஹரிகரராஜ், கல்வி அபிவிருத்திப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் என். நேசகஜேந்திரன், உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி நிர்மலா அகிலன், ஆசிரிய வாண்மை விருத்தி நிலைய விரிவுரையாளர் திருமதி வி. முருகவேல், ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *