அறியாமை எனும் இருள் அகன்று மெய்ஞான ஒளி பெருகவும், தீமை வீழ்ந்து நன்மை ஓங்கவும் வேண்டி உலகெங்கும் வாழும் இந்துப் பெருமக்களால் கொண்டாடப்படும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அதிகாரத்தின் துணையோடு அடக்குமுறையை ஏவ முயன்ற கொடிய எண்ணங்களைத் தகர்த்தெறிந்ததை நினைவுகூரும் தீபாவளிப் பண்டிகையின் தத்துவம், தற்போதைய சமூக-பொருளாதாரச் சூழலுக்கு மிகவும் பொருத்தமுடையதாக அமைகிறது.
மக்களின் பொருளாதார நெருக்கடிகள், சுதந்திரமாக வாழும் உரிமை மற்றும் சனநாயக இறையாண்மை ஆகியவற்றை நசுக்கும் வகையில் பல சட்டமுன்வரைவுகள் நிறைவேற்றப்பட்டு வரும் இச்சூழலில், சமூகத்தைச் சூழ்ந்துள்ள அறியாமை இருளை நாம் உணர்கிறோம். இது மக்களின் நல்வாழ்வுக்குப் பதிலாக அல்லல்களையே அதிகரிக்கச் செய்கிறது.
இந்த அநீதியை வீழ்த்தி, சமூகத்தை இருளிலிருந்து ஒளிக்கும், தீமையிலிருந்து நன்மைக்கும் இட்டுச் செல்வது தீமைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் அனைவரினதும் தலையாய கடமையாகும். அக்கடமையை மிகுந்த பொறுப்புணர்வுடன் நிறைவேற்றுவதற்குத் தேவையான உறுதியை தீபாவளித் திருநாள் எமக்கு உணர்த்துகின்றது.
பல்வேறு மதங்கள், இனங்கள் மற்றும் மொழிகளைக் கொண்ட எமது தாய்நாட்டைச் சிறந்ததொரு தேசமாகக் கட்டியெழுப்ப, தற்போதைய சூழலைச் சரியாகப் புரிந்துகொண்டு செயலாற்றுவதற்கான திடகாத்திரமான மனவலிமையும் வழிகாட்டலும் இத்தீபாவளித் திருநாளில் அனைவருக்கும் கிடைக்கப் பெறட்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

