நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முன்னெடுத்துள்ள சுகயீன விடுமுறை தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக, கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள அரச அலுவலகங்களின் நாளாந்த செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (09.11.2026) அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
தமது பிரச்சினைகள் தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் அதிகாரிகளுக்கு அறிவித்த போதிலும், இதுவரை உரிய கவனம் செலுத்தப்படவில்லை என ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் தம்மிக முனசிங்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அரச நிறுவனங்களின் பல்வேறு உள்நாட்டுப் பணிகளை முன்னெடுத்து வருவதால், அவர்களின் பணிப்புறக்கணிப்பினால் அமைச்சுகள், திணைக்களங்கள், மாகாண சபைகள் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்படும் இந்தப் போராட்டத்தில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட ஒன்பது மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளன.
தமது கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொறுப்பான அமைச்சர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கான கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

