தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (11) பாரிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர். முரளீஸ்வரனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், கொக்குவில் பொது சுகாதாரப் பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட சின்ன ஊரணி கிராம சேவகர் பிரிவில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய்த் தாக்கம் அதிகமாகக் காணப்படுவதுடன், ஊரணி பகுதியில் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமையைக் கருத்திற்கொண்டு இந்த விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, வீடுகள், வடிகால்கள், வெற்றுக் காணிகள் உள்ளிட்ட இடங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், நீர் தேங்கக்கூடிய கொள்கலன்கள் மற்றும் நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களும் அடையாளம் காணப்பட்டு அகற்றப்பட்டன.
அகற்றப்பட்ட கழிவுப் பொருட்கள் மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்களால் உடனடியாக அகற்றப்பட்டதுடன், டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவான சூழலைப் பேணியவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், நுளம்புகள் அடையாளம் காணப்பட்ட இடங்களில் சிவப்பு நிற எச்சரிக்கை ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டன.
கொக்குவில் பொது சுகாதாரப் பரிசோதகர் பிரிவின் சுகாதாரப் பரிசோதகர் எஸ். அமுதமாலனின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நடவடிக்கையில், மேற்பார்வை சுகாதாரப் பரிசோதகர் இரா. இன்பராஜா, சுகாதாரப் பரிசோதகர் ஜே. யசோதரன் உள்ளிட்ட சுகாதாரப் பரிசோதகர்கள், விமானப்படையினர், பொலிஸார், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள் மற்றும் சுகாதார உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
டெங்கு நோயைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என வலியுறுத்திய சுகாதாரப் பிரிவினர், வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களைத் தூய்மையாகப் பேணுவதுடன், நீர் தேங்கக்கூடிய பொருட்களை அகற்றுமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டனர்.
மாவட்டத்தில் டெங்கு நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறான விசேட சோதனை மற்றும் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

