அமெரிக்காவின் மிசிசிப்பி ஆற்றில் நியூ ஆர்லியன்ஸ் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த பயணிகள் கப்பல் ஒன்றின் மீது பாரிய எண்ணெய்த் தாங்கிக் கப்பல் நேற்று வெள்ளிக்கிழமை (13) மோதிய விபத்தில், கப்பலிலிருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கன் குரூஸ் லைன்ஸ்’ (American Cruise Lines) நிறுவனத்திற்குச் சொந்தமான ‘அமெரிக்கன் ஹெரிட்டேஜ்’ (American Heritage) என்ற சொகுசுப் பயணிகள் கப்பல் மீது, ‘அட்லாண்டிக் அஸ்பால்ட்’ (Atlantic Asphalt) என்ற சரக்குக் கப்பல் மோதியதில், பயணிகள் கப்பல் ஒரு பக்கமாகச் சாய்ந்து ஆற்றில் மூழ்கியுள்ளது.
விபத்து நடந்தபோது பயணிகள் கப்பலில் சுமார் 129 முதல் 180-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்துள்ளதாகவும் இவ்விபத்தில் காயமடைந்த 32 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், எவரும் உயிரிழக்கவோ அல்லது காணாமல் போகவோ இல்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
எனினும், அவசரகால மீட்புக் குழுவினர் மற்றும் அமெரிக்கக் கடலோரப் படையினர் நடத்திய தீவிர மீட்பு நடவடிக்கையால் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மீட்புப் பணிகளுக்காகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த மிசிசிப்பி ஆற்றுப் போக்குவரத்தை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளும், விபத்து குறித்த மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

