கல்விக்கான உலகளாவிய கூட்டாண்மையினால் (Global Partnership for Education – GPE) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரதிநிதிகள் மாநாட்டில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 2026 நவம்பர் 18 ஆம் திகதி கலந்துகொண்டார்.
நவம்பர் 17 முதல் 19 வரை நடைபெற்ற இம்மாநாட்டில், GPE அமைப்பின் ஆசிய பசுபிக், கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் வட ஆபிரிக்கப் பிராந்தியங்களைச் சேர்ந்த கல்வி அமைச்சுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாகக் குறிப்பிடுகையில், அச்சீர்திருத்தங்களின் பிரதான நோக்கம் கல்வியின் தரத்தை உயர்த்துவதாகும் எனத் தெரிவித்தார்.
போட்டித்தன்மை மிக்க பரீட்சைகளை மையமாகக் கொண்ட கல்வி முறையினால், மாணவர்களின் சமூகத் திறன்கள், ஆக்கத்திறன், விமர்சனச் சிந்தனை மற்றும் உள நலம் ஆகியவற்றின் வளர்ச்சி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அதற்கமைய, மதிப்பீட்டு முறைமைகள், திறன்கள், மனப்பாங்குகள் மற்றும் முழுமையான கற்றல் செயன்முறை ஆகியவற்றின் மீது அதிக கவனம் செலுத்தி, மாணவர் மையமானதும் ஊடாடலுடன் கூடியதுமான கற்பித்தல் அணுகுமுறையொன்றை அறிமுகப்படுத்துவதே இச்சீர்திருத்தங்களின் நோக்கமாகும் எனப் பிரதமர் வலியுறுத்தினார்.
இச்சீர்திருத்தங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு, ஆசிரியர் கல்வியை வலுப்படுத்துதல், ஆசிரியத் தொழிலின் தொழில்சார் தரத்தை உயர்த்துதல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் ஆகியவை இன்றியமையாதவை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், கல்வித் துறையில் பாடசாலைகளுக்கு இடையே காணப்படும் ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்து, நாடு முழுவதிலுமுள்ள அனைத்துப் பிள்ளைகளுக்கும் தரமான கல்வியைச் சமமாகப் பெறுவதற்கான வாய்ப்பை உறுதிப்படுத்துவதற்காக, பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள், டிஜிட்டல் இணைப்புகள் மற்றும் பயனுள்ள கற்றல் – கற்பித்தல் சூழல்களில் முதலீடு செய்வதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.
சர்வதேச நெருக்கடி நிலைமைகள் கல்விக்கான நிதியளிப்பில் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்த பிரதமர், அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட மூன்று வரவு செலவுத் திட்டங்களிலும் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அந்நிதியைப் பயனுள்ள வகையில் பயன்படுத்தி, கல்வி முறைமைக்குள் உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் வலியுறுத்தினார்.
அரசாங்கம் முன்னெடுத்து வருவது கல்விச் சீர்திருத்தங்களை மாத்திரமன்றி, ஒட்டுமொத்தக் கல்வி முறைமையையும் மாற்றியமைக்கும் மிகவும் விரிவானதும் சவாலானதுமான பணியாகும் எனப் பிரதமர் இதன்போது மேலும் வலியுறுத்தினார்.
மனித மூலதனத்தில் முதலீடு செய்வது அரசாங்கத்தின் பிரதான முன்னுரிமையாகத் தொடர்ந்தும் இருந்துவருவதாகவும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

