சம்மாந்துறையில் இலங்கை மின்சார சபையின் (CEB) அலுவலகத்தை அமைப்பதற்கான காணியைத் தெரிவு செய்யும் விடயத்தில், நிறுவனத்தின் தன்மை மற்றும் காணியின் பெறுமதி தொடர்பான வாதங்களை விட பொதுமக்களின் நலனுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என சம்மாந்துறைப் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எச்.எம். காலித் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று (19) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் இலகுவாகச் சென்றடைந்து சேவைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலும், மின்சார சபை ஊழியர்கள் விரைவாகச் சேவைகளை வழங்குவதற்கு ஏதுவாகவும் சம்மாந்துறையின் மத்திய பகுதியில் பொருத்தமான காணி தெரிவு செய்யப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
கட்டடத்தை நிர்மாணித்து வாடகைக்கு வழங்குவது அல்லது காணியை வழங்கி இலங்கை மின்சார சபையினரே கட்டடத்தை அமைப்பது என எந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டாலும், குறித்த அலுவலகம் சம்மாந்துறையில் நிரந்தரமாக இயங்குவதற்கான நடவடிக்கைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் இச்சேவை நிறுவனம் சம்மாந்துறையை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டால், அது பிரதேசத்திற்குப் பெரும் இழப்பாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை மின்சார சபையின் அலுவலகத்தை அமைப்பதற்கான பொருத்தமான காணியை அடையாளம் காண்பது தொடர்பில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இவ்விடயங்கள் ஆராயப்பட்டதுடன், எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி மீண்டும் கலந்துரையாடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

