மட்டக்களப்பு களுவன்கேணி பாரதி விளையாட்டு கழகம் மற்றும் களுவன்கேணி விவேகானந்தா மகா வித்தியாலய சாரண மாணவர்களுடன் இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததானம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்கள், சத்திர சிகிச்சைகளுக்கு உட்படும் நோயாளர்கள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவத் தேவைகளுக்காகக் குருதி தேவைப்படும் நோயாளர்களின் உயிர்களைக் காப்பாற்றுவதில் இரத்ததானம் முக்கிய பங்கு வகிக்கின்றது.
இதனைக் கருத்திற் கொண்டு, வைத்தியசாலையின் குருதித் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், தன்னார்வ இரத்ததானம் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கும் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவ் இரத்ததான முகாமில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியைச் சேர்ந்த குழுவினர் இரத்ததான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
களுவன்கேணி விவேகானந்தா மகா வித்தியாலயத்தின் அதிபர் தேவராசா பிராத்தனன் தலைமையில் நடைபெற்ற இவ் இரத்ததான முகாமில் பாடசாலை சாரண அணியினர், களுவன்கேணி பாரதி இளைஞர் கழகம் மற்றும் விளையாட்டு கழகத்தின் உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் என 25 கொடையாளர்கள் இதன் போது பங்குபற்றி இரத்ததானம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

