சமுத்திர உயிர்ப்பல்வகைமை பாதுகாப்பு மற்றும் கடல் பற்றிய பொதுமக்களின் புரிதலை விரிவுபடுத்துவதற்காக செய்த சேவையைப் பாராட்டி இலங்கையின் சமுத்திர உயிர்ப்பல்வகைமை கலாநிதி ஆஷா டி வொஸிற்கு ஐக்கிய இராச்சியத்தின் சமுத்திர உயிரியல் சங்கத்தினால் (The Marine Biological Association) கௌரவ பதவி வழங்கப்பட்டுள்ளது.
வட இந்தியப் பெருங்கடலில் வாழும் நீலத் திமிங்கலங்கள் உள்ளிட்ட கடல் பாலூட்டிகள் குறித்து அவர் பல தசாப்தங்களாக மேற்கொண்ட ஆராய்ச்சிகள் மற்றும் கடல் பாதுகாப்பு கல்வி விஞ்ஞானத் தொடர்பாடல் ஆகியவற்றுக்காக ஆற்றிய பணிகளைப் பாராட்டிஇ நவம்பர் 18ஆம் திகதி குறித்த சங்கத்தினால் இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
சமுத்திர உயிரியல் சங்கத்தின் அரச சாசனத்தின் பிரகாரம் சமுத்திர உயிரியல் துறைக்கு விசேடமானதும் தாக்கம் மிக்கதுமான பங்களிப்பை வழங்கிய நபர்களுக்கு இக்கௌரவம் வழங்கப்படுகின்றது.
கலாநிதி டி வொஸ் சர்வதேசப் புகழ்பெற்ற சமுத்திர உயிரியலாளர் கடல்சார் கல்வியாளர் நூலாசிரியர் மற்றும் வட இந்தியப் பெருங்கடலில் நீலத் திமிங்கலங்கள் குறித்த நீண்டகால ஆராய்ச்சிகளின் முன்னோடியாகவும் அச்சங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும் அவர் இலங்கையின் முதலாவது ஆழ்கடல் ஆய்வாளர் மற்றும் நீருக்கடியிலான ஆராய்ச்சியாளராகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்பில் வாழும் கடல் பாலூட்டிகள் குறித்த விஞ்ஞான ரீதியான புரிதலை விரிவுபடுத்துவதற்கு அவரது ஆராய்ச்சிகள் பெரிதும் உதவியுள்ளதோடு பொதுச் சொற்பொழிவுகள் நூல்கள் ஆவணப்படங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாகக் சமுத்திர விஞ்ஞானத்தை மக்களிடம் பரவலாகக் கொண்டு சேர்ப்பதிலும் அவர் வெற்றி கண்டுள்ளார்.

