மாவடிப்பள்ளி உயிரிழப்புகளுக்கு விசேடபிரார்த்தனை!

2024 நவம்பர் 26ஆம் திகதி காரைதீவு – மாவடிப்பள்ளிப் பகுதியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் உயிரிழந்த மத்ரஸா மாணவர்கள் உள்ளிட்ட ஏழு பேரின் நினைவாக, அம்பாறை மாவட்ட உயிர்காப்பு மற்றும் அவசரகால மீட்புக் குழுவினரால் நேற்றைய தினம் வியாழக்கிழமை சம்மாந்துறை கலாசார மண்டபத்தில் விசேட துஆப் பிரார்த்தனையும் கலந்துரையாடலும் ஏற்பாடு செய்யப்பட்டன.
அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இயங்கும் இக்குழுவின் தலைவர் எஸ்.எம். பிரோஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், உயிரிழந்தவர்களின் மறுமை வாழ்வுக்காகப் பிரார்த்திக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, குழுவின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களின்போது பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள், அனர்த்தங்களை எதிர்கொள்ளும் வழிமுறைகள் மற்றும் அவசரகால மீட்புப் பணிகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது.
மாவடிப்பள்ளி வெள்ள அனர்த்தத்தின் நினைவுகளைப் பாதுகாப்பதுடன், எதிர்காலத்தில் இத்தகைய அனர்த்தங்களால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்கான விழிப்புணர்வையும் மீட்புத் தயார்நிலையையும் மேம்படுத்தும் நோக்கில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *