EASCCA Academy கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது!

இலங்கையின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த புற்றுநோயாளர்களுக்கு இன, மத, மொழி மற்றும் பிரதேச வேறுபாடுகளைக் கடந்து இலவசமாகப் புற்றுநோய் பராமரிப்பு மற்றும் ஆதரவுச் சேவைகளை வழங்கிவரும் கிழக்குப் புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் (EASCCA) எதிர்கால அபிவிருத்தித் திட்டமான Medical Village இன் ஓர் அங்கமான EASCCA Academy கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று  (26.11.2026) நடைபெற்றது.

EASCCA நிறுவனத்தின் கௌரவத் தவிசாளர் அல்-ஹாஜ் S.L.M. பௌஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்நெத்தி கலந்து கொண்டார். கௌரவ அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கந்தசாமி பிரபு பங்கேற்றார்.

மேலும், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான J.S. அருள்ராஜ், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் R. முரளீஸ்வரன், கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் UKM. அப்துல்லாஹ், ஏறாவூர் நகர தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர் அசனார் ரசூல் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதன்போது EASCCA நிறுவனத்தின் இதுவரையான சேவைகள், அடைந்துள்ள சாதனைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டமான Medical Village தொடர்பான விளக்கக்காட்சி முன்வைக்கப்பட்டது. அத்துடன், எதிர்கால அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்குத் தேவையான வளங்கள் மற்றும் ஆதரவுகளைக் கோரும் மனுவும் கையளிக்கப்பட்டது.

மேலும், தேசிய உற்பத்தித்திறன் விருதுப் போட்டியில் முதன்முறையாகப் பங்கேற்று தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்ற EASCCA நிறுவனத்தின் சாதனையைப் பாராட்டி, அதற்குப் பங்களிப்புச் செய்த பணியாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

EASCCA Medical Village திட்டமானது புற்றுநோயாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான பராமரிப்புச் சேவைகளை மேம்படுத்துவதுடன், கல்வி, தொழில்முறைப் பயிற்சி மற்றும் பல்வேறு ஆதரவுச் சேவைகளை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்நிகழ்வில் EASCCA நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *