அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (04.04.2025) பி. ப 02.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன் போது தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள் யாழ்ப்பாண மாவட்ட கிராமிய வீதி அபிவிருத்திக்கு 1000.00 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
2025.03.25 ஆம் திகதி இடம்பெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் வீதிகள் தொடர்பான உப குழுக் கூட்டத்தினை ஒழுங்குபடுத்துமாறு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக வீதிகளை தெரிவு செய்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு சமர்ப்பிப்பதே இக் கூட்டத்தின் நோக்கம் எனவும் தெரிவித்தார்.
மேலும் கூட்டத்தில் கிராமிய அபிவிருத்தித் திட்டம், வீட்டுத் திட்டம், சமுர்த்தி வலுப்படுத்தல் வேலைத் திட்டம், நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை யின் வீட்டுத்திட்டம் போன்ற திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாகவும் அரசாங்க அதிபர் தலைமையில் ஆராயப்பட்டு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம பொறியியலாளர், மாவட்டச் செயலக பிரதம கணக்காளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்,பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக பிரதி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், கணக்காளர்கள் மற்றும் மாவட்ட செயலக திட்டமிடல் துறைசாா் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

