09 மாகாணங்களில் முன்பள்ளி பணியகங்களை ஒன்றிணைத்து தேசிய கொள்கை ஒன்றினை ஏற்படுத்த செயற்திட்டம்

நமது நாட்டில் 09 மாகாணங்களில் இயங்கி வரும் முன்பள்ளி பணியகங்களை ஒன்றிணைத்து தேசிய கொள்கை ஒன்றினை உருவாக்கி செயற்படுத்துமாறு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் (08.04.2025) பாராளுமன்ற கட்டிடத்தில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் திருமதி சரோஜா போல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

*தொடர்ந்து கருத்து தெரிவித்த சரோஜா போல்ராஜ்,

முன்பள்ளி கல்வியினை ஒழுங்கு படுத்தி நமது மாணவர்களின் ஆரம்ப கல்வித் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்படவேண்டும். முன்பள்ளி பணியகங்களுக்கு மாகாண மட்டத்தில் தவிசாளர் – முகாமைத்துவப் பணிப்பாளர்கள் பதவிகளுக்கு நியமனங்கள் மேற்கொள்கின்ற போது கல்வித்துறையினை சேர்ந்தவர்களுக்கே நியமனம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும்.

கிழக்கு மாகாண சபையில் 2 தடவைகள் அமைச்சராக நான் பதவி வகித்த காலத்தில் கிழக்கு மாகாண முன்பள்ளித் துறைக்கு முடிந்தளவு பணி செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவாக 5000/= மாத்திரமே வழங்கப்பட்டு வருகிறது. அர்ப்பணிப்புடன் நமது மாணவர்களுக்கான ஆரம்ப கல்வித்துறைக்கு பணி புரியும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மாதாந்த கொடுப்பனவவை அதிகரித்து நமது நாட்டில் முன்பள்ளித் துறைக்கு பணி புரியும் ஆசிரியர்களுக்காக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தில் கடந்த 14 வருட காலமாக கடமை புரியும் உத்தியோகத்தர்களுக்கான பதவி உயர்வுகள் இது வரையும் வழங்கப்படாமலுள்ளது. 2023ல் நடைபெற்ற ஈபி பரீட்சையின் முடிவுகள் இது வரையும் வெளியாகாமல் உள்ளன எனவே இவர்களுக்கான பதவி உயர்வுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பையுடைய கோரிக்கைக்கு பதிலளித்த சிறுவர் மற்றும் மகளிர் அலுவல்கள் அமைச்சர் திருமதி சரோஜா போல்ராஜ் பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை அவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதாகவும், எதிர்காலத்தில் 09 மாகாண சபைகளில் இயங்கி வரும் முன்பள்ளி பணியகங்களை ஒன்றிணைத்து ஒரு கல்வித் திட்டத்தை செயற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை சிறுவர் மற்றும் மகளிர் அலுவல்கள் அமைச்சும், கல்வி அமைச்சும் இணைந்து முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

*தொடர்ந்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை,

அண்மையில் பாராளுமன்றத்தில் எமது முஸ்லிம் சமூகம் தொடர்பாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் திருமதி. சரோஜா போல்ராஜ் அவர்கள் முஸ்லிம்களின் குழந்தை திருமணம் அனுமதிக்கப்பட்ட முஸ்லிம் விவாக , விவாகரத்து சட்டத்தை மாற்ற இலங்கை அரசு ஆலோசனை செய்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையிடம் உறுதி வழங்கியதாக வெளியிடப்பட்ட செய்தி தொடர்பாக முஸ்லிம் சமூகத்தின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இந்த விடயத்தை பாராளுமன்றத்தில் உங்களிடம் எத்தி வைத்தேன்.

இதற்கு பதிலளித்த அமைச்சராகிய நீங்கள் முஸ்லிம் சமூகத்தின் குழந்தை திருமணம் தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என மறுத்ததுடன், இது தொடர்பாக செய்தி வெளியிட்ட டெய்லி சிலோனுக்கு எதிராக தான் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்தீர்கள்.இது வரை இது சம்பந்தமாக ஏதாவது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்ற விபரங்களை அமைச்சர் அவர்கள் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

சிறுவர் மற்றும் மகளிர் அலுவல்கள் அமைச்சராக இருந்து செய்து வரும் நல்ல பணிகளை வரவேற்கிறோம். உங்களுக்கும் எங்களுக்கும் எந்த ஒரு தனிப்பட்ட பிரச்சினையுமே கிடையாது என்பதனை அமைச்சரும், அமைச்சின் அதிகாரிகளும் புரிந்து கொள்ள வேண்டும். சிலர் அரசியல் நோக்கங்களுக்காக சில தவறான கருத்துக்களை பாராளுமன்றத்தில் தெரிவித்து வருவது கவலைக்குரிய விடயமாகும் என தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் சரோஜா போல்ராஜ் அவர்கள் தான் முஸ்லிம் சமூகத்தின் குழந்தை திருமணம் சட்டம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை எனவும் டெய்லி சிலோனினால் வெளியிடப்பட்ட தவறான செய்திக்கெதிராக தமது அமைச்சு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *