வன்னியின் இறுதி மன்னன் மாவீரன் பண்டார வன்னியனின் 222ஆம் ஆண்டு வெற்றிநாள் இன்று(25) பல இடங்களிலும் நினைவு கூரப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் பண்டாரவன்னியன் ஒரே வாள்வீச்சில் அறுபது வெள்ளையர்களை வீழ்த்தியதாகக் கூறப்படும் முல்லைத்தீவு – முள்ளியவளை, கற்பூரப் புல்வெளியில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பண்டாரவன்னியனுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில் கற்பூரப் புல்வெளியில் மலர்தூவி, சுடரேற்றி உணர்வெழுச்சியுடன் அஞ்சலி நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் சின்னராசா லோகேஸ்வரன், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் வீரசிங்கம் கலைச்செல்வன் மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பொதுச்சபை உறுப்பினர் கிட்ணபிள்ளை சிவகுரு ஆகியோர் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


