கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் சூழல் மேம்பாட்டு நோக்கின் பங்களிப்பாகப் திராய்மடு மாவட்ட செயலக வளாகத்தின் கட்டடத் தொகுதியை சூழவுள்ள நிலப்பரப்பை சுத்தப்படுத்தும் பணியில் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் கிழக்கு வலய அலுவலகம், மாவட்ட காணிப்பதிவகம் ஆகியன நேற்று (16) ஈடுபட்டன.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்தின் மேற்பார்வையில் க்ளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத் திட்டத்தின் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில், பிரதிப் பதிவாளர் நாயகம் கே. நடராஜா தலைமையில் நடைபெற்ற சுத்தப்படுத்தும் பணியை பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் கிழக்கு வலய அலுவலகம் மற்றும் மாவட்ட காணிப்பதிவகம் என்பவற்றில் சேவையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை அலுவலர்கள் என பலர் முன்னெடுத்தனர்.
கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஊடாக பயன் தரும் மரங்கள் மற்றும் அழகுத் தாவரங்களை நட்டு பூந்தோட்டம் அமைத்தல் போன்ற செயற்பாடுகள், மாவட்ட செயலகத்தில் இயங்கி வரும் சகல அரச திணைக்களங்கள், மாவட்ட அலுவலகங்கள் மற்றும் பிரிவுகளில் பணிபுரியும் அரசாங்க உத்தியோகத்தர்களினால் நடைமுறைப்படுத்துவதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

