சென்ற வருடம் அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அம்பாறை மாவட்ட மீனவர்களின் இயந்திரப் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் சேதமாக்கப்பட்டன. மீனவர்களுக்கான நஷ்டஈடுகள் வழங்கப்படாத நிலையில் மீனவர்கள் வாழ்வாதாரமின்றி வாழும் நிலைமை உருவாகியுள்ளது. எனவே, அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான நஷ்டஈடுகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மீன்பிடி அமைச்சு மேற்கொள்ள வேண்டும் என மீன்பிடி அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் மீன்பிடி அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தில் 09ஆம் திகதி நடைபெற்ற போது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமலெப்பை கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்…
மீன்பிடி அமைச்சின் இபாட் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை, நிந்தவூர் கடற்கரை பிரதேசங்களில் மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகம் செய்வதற்கு மண்ணெண்ணெய் நிரப்புநிலையங்களை பெருந்தொகை நிதியில் நிர்மாணித்து இதுவரையும் மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்படாமல் மண்ணெண்ணெய் நிரப்பு நிலையங்கள் சேதம் அடைந்த நிலையில் உள்ளன. மீன்பிடி திணைக்களத்தினால் இதனை செயல்படுத்த முடியாத நிலைமை உள்ளது. எனவே, மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் நிரப்பு நிலையங்களை புனரமைப்பு செய்து மீன்பிடித் திணைக்களம் மீனவர்கள் நன்மை அடையக்கூடிய நிலைமையை மீன்பிடி அமைச்சு ஏற்படுத்த வேண்டும். இல்லையெனில் அட்டாளைச்சேனை, நிந்தவூர் பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்களுக்கு பாரம் கொடுத்து இவ் மண்ணெண்ணெய் நிரப்பு நிலையங்களை இயங்கச் செய்வதன் ஊடாக மீனவர்கள் நன்மை பெறக்கூடிய ஏற்பாடுகளை மீன்பிடி அமைச்சு மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.
ஒலுவில் துறைமுகத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கையினை அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் முன்மொழிந்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை…
ஒலுவில் துறைமுகம் அமைந்துள்ள பிரதேசம் எமது பிரதேசமாகும். ஒலுவில் பிரதேச மக்களின் காணிகள் ஒலுவில் துறைமுகம், மீன்பிடித் துறைமுகம், தென்கிழக்கு பல்கலைக்கழகம், மாபொல பயிற்சி வழங்கும் கல்லூரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஒலுவில் மக்களுக்கு மிஞ்சியுள்ள காணி கடல் அரிப்பினால் காவு கொள்ளப்பட்டதனால் ஒலுவில் மக்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். ஒலுவில் துறைமுகத்தையும் மீன்பிடித் துறைமுகத்தையும் செயற்படுத்துவதற்கு ஒலுவில் கடல் அரிப்பு விடயத்திற்கு நிரந்தரமான தீர்வினைக் காண வேண்டும். ஒவ்வொரு காலத்திலும் மீன்பிடி அமைச்சர்களாக பதவி வகித்தோர் ஒலுவில் துறைமுகத்தை பார்வையிட வருகிறார்கள். துறைமுகத்தை செயற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாக கூறுகின்றார்கள் இதுவரையும் எந்தவிதமான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படாமல் நிலைமை தொடர்கிறது.
தற்போது மீன்பிடி அமைச்சராக பதவி வகிக்கும் நீங்களும் ஒலுவில் துறைமுகத்தை அண்மையில் பார்வையிட்டீர்கள். ஒலுவில் மக்களின் கடல் அரிப்புக்கு கரையோர பாதுகாப்பு திணைக்களம், மீன்பிடி அமைச்சு தீர்வினை இனங்கண்டு நிரந்தரமான தீர்வுகளை வழங்கி துறைமுகத்தை செயற்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.
மீன்பிடி பிரதி அமைச்சர் திரு. ரத்ன கமகே பதிலளிக்கையில்…
2024 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ள காலத்தில் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட மீனவர்களுக்கான நஷ்டஈடுகள் வழங்கும் செயற்பாடுகளை நடைமுறைபடுத்துவது தொடர்பாக மீன்பிடி அமைச்சு பல முயற்சிகளை மேற்கொள்ளவதாகவும் இது தொடர்பாக ஜனாதிபதியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் காப்புறுதி செய்திருந்தால் நஷ்டஈடுகளை வழங்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கலாம் எனவும், மீனவர்களுக்கான நஷ்டஈடு வழங்குவது தொடர்பாக மீன்பிடி அமைச்சு செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை, நிந்தவூர் மண்ணெண்ணெய் நிரப்பு நிலையங்களை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் தொடர்பு கொண்டு இயங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகவும், அட்டாளைச்சேனை, நிந்தவூர் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்குவது தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை ஒலுவில் துறைமுகங்கள் தொடர்பாக மீன்பிடி அமைச்சின் இறுதித் தீர்மானம் தொடர்பாக இவ் ஆலோசனைக் கூட்டத்தில் விபரங்களை தெரிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். ஒலுவில் துறைமுகம் தொடர்பாக பொறியியலாளர் குழுவினர் பரிசீலனை செய்வதாகவும் பொறியியலாளர் குழுவின் அறிக்கை கிடைத்ததும் ஒலுவில் துறைமுகம் தொடர்பான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

