சாய்ந்தமருது நபரிடம் இலஞ்சமாக பெற்ற பொலிஸ் உத்தியோகத்தரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
நேற்று(12) சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் டி. கருணாகரன் முன்னிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஆஜர்படுத்திய போது இவ்வாறு உத்தரவிட்டார்.
வழக்குப் பதிவு செய்யாதிருக்க ஒருவரிடம் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் 32 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் தன்னிடம் 10 000 ரூபா இலஞ்சம் கோருவதாக ஒருவர் கொழும்பிலுள்ள இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனடிப்படையில் ஆணைக்குழு அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய சம்பவ தினமான வியாழக்கிழமை(11) மாலை குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கூறியமைக்கு அமைவாக இலஞ்சப் பணத்தை காரைதீவு பொலிஸ் நிலையத்தில் வைத்து அந்நபர் வழங்கியுள்ளார்.
இதன்போது அங்கு மாறு வேடத்தில் காத்திருந்த இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் இலஞ்சப் பணத்தை வாங்கும்போது கைது செய்தனர்.
மேலும் காரைதீவு பொலிஸ் பிரிவில் பொதுபோக்குவரத்து சேவையில் ஈடுபட்ட சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த நபரிடமிருந்து வாகன சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுக் கொண்டு வழக்கு பதிவு செய்யாமல் அவற்றை மீள தருவதற்கு குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அந்த நபரிடமிருந்த 10,000 ரூபா இலஞ்சம் கோரியிருந்தமை ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

