கல்வி அமைச்சினால் தேசிய ரீதியில் நடத்தப்பட்ட கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் 2024/2025 ஆண்டுகளில் சித்தி அடைந்த பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மண்முனை மேற்கு கல்வி வலயத்தினால் நடத்தப்பட்ட இந்த நிகழ்வின் போது கல்வித் திணைக்கள உயர் அதிகாரிகள், தேசிய மக்கள் சக்தியின் மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் எல்லை நிர்ணய மாகாண சபை முறைமை காரணமாகவே மாகாண சபை தேர்தல் பிற்போடப்பட்டது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை வைக்கும் உறுதியோடு காத்திருக்கின்றோம். எனவே எல்லை நிர்ணயப் பணிகள் நிறைவடைந்ததும் மிகவிரைவாக இந்த தேர்தலை நடத்த கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளனஎன அவர் மேலும் தெரிவித்தார்.


