மட்டக்களப்பில் போதைப்பொருள் வர்த்தகர்கள் இருவர் கைது 

மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி மற்றும் திருப்பெருந்துறை பகுதிகளில் போதைப்பொருள் மற்றும் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகளை முற்றுகையிட்ட பொலிஸார் பிரபல போதைப்பொருள் வியாபாரி ஒருவரை 5 கிராம் 650 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளுடனும் 24 போத்தல் கசிப்புடன் ஒருவர் உட்பட இருவரை நேற்று(02) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தெரிவித்தார்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து மட்டு தலைமையகப் பொலிஸ் நிலைய ஊழல் மற்றும் போதை ஒழிப்புபா பிரிவுப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பிரபாத் பெர்ணான்டோ தலைமையிலான பொலிஸார் சம்பவ தினமான நேற்று இரவு கருவப்பங்கேணி பகுதியிலுள்ள போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வரும் பிரபல போதைப்பொருள் வியாபாரியின் வீட்டை முற்றுகையிட்டனர்.

இதன்போது 34 வயதுடைய பிரபல வியாபாரியை 5 கிராம் 650 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்த போது அங்கு பெண்கள் உட்பட சிலர் ஒன்றிணைந்து கைது செய்தவரைக் கொண்டு செல்ல விடாது பொலிஸாரை தடுத்து பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் அவரை அங்கிருந்த பொலிஸார் மீட்டெடுத்து கொண்டு சென்றனர்.

அதேவேளை திருப்பெருந்துறையை பகுதியில் கசிப்பு விற்பனை நிலையத்தை முற்றுகையிட்ட போது அங்கு கசிப்பு வியாபரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 56 வயதுடைய ஒருவரை 24 போத்தல் கசிப்புடன் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரியை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்காக நீதிமன்ற அனுமதியைப் பெறுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் மற்றும் கசிப்புடன் கைது செய்தவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *