அமெரிக்கா- இந்தியாவுக்கும் இடையிலான ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில் பாரிய முன்னேற்றம்

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில் பாரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள அதேநேரம் பேச்சு வார்த்தைகள் சிறப்பாக இடம்பெற்று வருவதாகவும் அமெரிக்க திறைசேரிச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமெரிக்காவுடனான இரு தரப்பு வர்த்தக உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகளும் சந்திப்புகளும் சாதகமானதாகவும் பயனுள்ள வகையிலும் அமைந்துள்ளதாக இந்தியாவும் குறிப்பிட்டுள்ளது. அதற்கேற்ப துறைசார் நிபுணர்கள் மட்ட பேச்சுவார்த்தையை இம்மாத இறுதியில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய அமெரிக்க திறைசேரிச் செயலாளர், நாம் இந்தியாவுடன் நெருக்கமாக செயற்படுகிறோம். அதனால் ஏனைய நாடுகளை விடவும் இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வது இலகுவாக அமைந்துள்ளது. எமக்கிடையிலான பேச்சுக்கள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன.

இந்தியாவுக்கு அண்மையில் விஜயம் செய்த அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி. வான்ஸுக்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதும் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அத்தோடு இருநாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்த தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக, இந்திய வர்த்தக திணைக்களம் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் என்பவற்றின் பிரதிநிதிகளும் அண்மையில் வொஷிங்டனில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் எனவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *