மட்டக்களப்பு, மயிலத்தமடு மற்றும் மாதவனை பகுதியில் கால்நடைப் பண்ணையாளர்களை சட்டவிரோதமாகப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுபவர்கள் பொலிசார் வாடிகளை அகற்றுமாறு அச்சுறுத்தி வருவதாக கால்நடை பண்ணையாளர்கள் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் சிரேஸ்ட அத்தியட்சகர் லலித் லீலா ரெத்தினவிடம் முறைப்பாடு செய்துள்ளனர்
மயிலமத்தமடு மாதவனை கால்நடை பண்ணையாளர் இன்று வெள்ளிக்கிழமை (2) மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் சிரேஸ்ட அத்தியட்சகர் லலித் லீலா ரெத்தினவை அவரது காரியாலயத்தில் சந்தித்து முறைப்பாடு செய்தனர் இதன் பின்னர் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தனர்.
மயிலத்தமடு பகுதியில் சட்டவிரோதமாகப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுபவர்கள் மற்றும் அங்குள்ள பொலிஸ் சோதனைச்சாவடி பொலிசார்; அங்கு வந்து பண்ணையாளர்களை அச்சுறுத்துவதோடு, அவர்களின் வாடிகளைப் பிரித்துச் செல்லுமாறு வற்புறுத்துகின்றனர்.
அதேவேளை அப்பகுதியில் உள்ள காடுகள் அழிக்கப்படுவதால் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்கள் பாதிக்கப்படுகின்றதுடன் யானை போன்ற வனவிலங்குகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தங்களின் மாடுகள் சுடப்பட்டு கொல்லப்படும் சம்பவங்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை அதேவேளை எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது தொடர்பான பிரச்சனைகள் குறித்து மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் சிரேஸ்ட அத்தியட்சகரிடம் தெரிவித்தோம்.
இந்த சந்திப்பின் போது அவர் யாவைற்றையும் கேட்டறிந்து கொண்ட அவர் மகாவலி மற்றும் வனப்பரிபாலனத் துறை அதிகாரிகளுடன் இணைந்து நாளை நேரில் வந்து கள நிலவரத்தை ஆராய்ந்து உரிய தீர்வு பெற்றுத் தருவதாகபொலிஸ் அத்தியட்சகர் உறுதியளித்துள்ளார்.
இருந்தபோதும் தங்களுக்கு நிரந்தரமான தீர்வு கிடைக்கும் வரை இதனைத் தற்காலிக ஆறுதலாக மட்டுமே ஏற்றுக்கொள்வதாகவும், பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நிரந்தரத் தீர்விற்காகக் காத்திருப்பதாகவும் மயிலத்தமடு கால்நடை வளர்ப்பு பண்ணையாளர் சங்கத் தலைவர் சின்னத்தம்பி நிமலன் மற்றும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

