தம்பிலுவில் பகுதியில் டெங்கு நுளம்பு பெருகும் சூழலை ஏற்படுத்தியதாக 14 வழக்குகள் பதிவு.
திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட தம்பிலுவில் பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட விசேட டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையைத் தொடர்ந்து, டெங்கு நுளம்பு பெருகக்கூடிய சூழலை வைத்திருந்ததாகக் கூறப்படும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டெம்பர் 28ஆம் திகதி விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், செப்டெம்பர் 30ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தீவிர மேற்பார்வையின் போது டெங்கு நுளம்பு பெருகுவதற்கு ஏதுவான சூழல்களை வைத்திருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, தம்பிலுவில் பகுதியைச் சேர்ந்த பொது சுகாதார பரிசோதகர்களான PHI G. சுகந்தன் மற்றும் PHI R. கிஷோகன் ஆகியோரால் 2007ஆம் ஆண்டின் நுளம்பு பெருக்கத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நேற்று (01) அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட 13 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம் விதித்துள்ளது.
மேலும், மற்றுமொரு நபருக்கு நீதிமன்ற அழைப்பாணை (Summons) விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, டெங்கு நோய் பரவலைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தம்பிலுவில் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் இந்த வாரமும் விசேட டெங்கு கட்டுப்பாட்டு மற்றும் சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு இல்லாத ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க பொதுமக்கள் அனைவரும் சுகாதார அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

