காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் கடந்த 22ம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்குப் பாகிஸ்தானை தளமாக கொண்ட லஷ்கர்- இ-தொய்பாவின் கிளை அமைப்பு பொறுப்பேற்றது.
இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. கடந்த வாரம் பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் முடக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து இந்திய இராணுவம் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு எதிராக தவறான தகவல்களை பரப்பியதற்காக 16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களை இந்தியா தடை செய்வதாக அறிவித்தது. இதில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தரின் சேனலும் அடங்கும்.
தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள், நடிகர், நடிகைகள், திரைப்பிரபலங்கள், பாகிஸ்தான் பாதுகாப்பு மந்திரி கவாஜா ஆசிப் உள்ளிட்டோரின் சமூக வலைத்தளப் பக்கங்களின் கணக்குகள் இந்தியாவில் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் யூடியூப் சேனலும் இந்தியாவில் முடக்கப்பட்டது.

