மொழிப்பாலத்திற்கான இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டத்தின் இறுதிநாள் நிகழ்வு

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் அனுசரணையில் மொழிப் பாலத்தைக் கட்டியெழுப்புவதற்கான இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டத்தின் இறுதிநாள் நிகழ்வு நேற்று(24) நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் காலை 10.00மணிக்கு குறித்த நிகழ்வு நடைபெற்றது.
இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் முரளிதரன், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் மேலதிக செயலாளர் மதுமதி வசந்தகுமார், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நளாஜினி, அமைச்சின் நிர்வாக உத்தியோகத்தர், திணைக்கள உத்தியோகத்தர்கள், தெரணியகல பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிளிநொச்சி மற்றும் கேகாலை மாவட்டங்களைச் சேர்ந்த 40 இளைஞர் யுவதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலை நிகழ்வுகள், அனுபவப் பகிர்வுகளைத் தொடர்ந்து நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்து கொண்டிருந்த 40 இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
“ஒன்றிணைந்து ஒரு தாயின் குழந்தைகளாக இருப்போம்” எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சி மாவட்ட செயலகம் மற்றும் கேகாலை மாவட்ட செயலகம் இணைந்து இரு கட்டங்களாக இந் நிகழ்ச்சித் திட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தன.
முதலாவதாக மொழிப் பாலத்தை கட்டியெழுப்புவதற்கான இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டம் அண்மையில் கேகாலை மாவட்ட செயலகம் மற்றும் தெரணியகல பிரதேச செயலகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட 20 இளைஞர் யுவதிகளின் பங்கேற்புடன் குறித்த மாவட்டத்தில் நான்கு தினங்கள் நடைபெற்றது.
இரண்டாவது கட்டமாக கிளிநொச்சி மாவட்ட செயலகம் கரைச்சி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், கேகாலை மாவட்டத்தின் தெரணியகல பிரதேச செயலகத்திற்குட்பட்ட 20 இளைஞர் யுவதிகளின் பங்கேற்புடன் கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை(21) ஆரம்பமாகி நேற்று வரையான நான்கு தினங்கள் நடைபெற்றன.
மொழித் திறன்களை மேம்படுத்துதல், கலாசார விழுமியங்களை அடையாளங்காணுதல், நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர நம்பிக்கையை உறுதி செய்தல் ஆகியன இத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
மேலும் பல்வேறு இனக்குழுக்களிடையே பரஸ்பர நம்பிக்கை மற்றும் நட்பைக் கட்டியெழுப்புவதன் மூலம் ஒற்றை இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்புதல், குழுக்களில் மொழிகளின் நடைமுறை பயன்பாட்டை விரிவுபடுத்துதல், கலாசார ஒத்துழைப்பின் வளர்ச்சியின் மூலம் நிலையான அமைதியைக் கட்டியெழுப்புதல் என்ற அடிப்படை நோக்கத்தினைக் கொண்ட இந் நிகழ்வினூடாக கேகாலை மற்றும் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் யுவதிகள் ஒன்றிணைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *